Post 12
POST 12: 'ஒரு யோகியின் சுயசரிதை'யில் பரமஹம்ச யோகானந்தா தன் குரு யுக்தேஸ்வருடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை விவரித்திருக்கிறார்.
கல்லூரியில் படிக்கையில் ஒரு கோடை விடுமுறையில் பூரி ஆஸ்ரமத்தில் உள்ள தன் குருவை சந்திக்க யோகானந்தா செல்கையில் தங்கள் தோட்டத்தில் விளைந்த ஆறு காலி•பிளவர்களை எடுத்துச் சென்றார். அவற்றை யோகானந்தாவின் அறையிலேயே வைத்திருந்து மறுநாள் சமையலுக்குத் தர யுக்தேஸ்வர் சொல்ல அவற்றைத் தன் கட்டிலுக்கு அடியில் யோகானந்தா உள்ளே தள்ளி வைத்தார். மறுநாள் அதிகாலை யுக்தேஸ்வருடன் யோகானந்தரும் மற்ற சீடர்களும் வெளியே காற்று வாங்க நடந்தனர். சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று யுக்தேஸ்வர் யோகானந்தரிடம் கேட்டார். "நீ ஆஸ்ரமத்தின் பின் கதவை சரியாகப் பூட்டினாயா?"
யோகானந்தர் யோசித்து விட்டு "பூட்டியதாகத் தான் நினைவு" என்றார்.
யுக்தேஸ்வர் சிரித்தபடி சொன்னார் "நீ சரியாகப் பூட்டவில்லை. அதன் தண்டனையாக நீ கொண்டு வந்திருந்த ஆறு காலி•ப்ளவர்களில் ஒன்றை இழக்கப் போகிறாய்". பிறகு அனைவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். ஆசிரமம் கண்ணுக்கெட்டும் தொலைவில் வந்தவுடன் அனைவரையும் அங்கேயே நின்று கவனிக்கச் சொன்ன யுக்தேஸ்வர் யோகனந்தரிடம் "இப்போது உன் தண்டனையை நிறைவேற்றப் போகிறவன் வருகிறான் பார்" என்றார். எல்லோரும் தூரத்தில் நின்றபடி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாட்டுப்புறத்தான் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் ஆசிரமத்தைக் கடந்து சென்றான்.
யுக்தேஸ்வர் சொன்னார். "இப்போது அவன் திரும்புவான் பார்".
அவர் சொன்னபடியே அவன் திடீரென்று திரும்பி வந்து ஆசிரமத்தின் பின் வாசற்புறம் சென்றான். அனைவரும் பரபரப்புடன் பார்த்துக் கொண்டே நின்றனர். சிறிது நேரத்தில் அவன் ஒரு காலி•ப்ளவருடன் ஆசிரமத்திலிருந்து வெளியே வந்து தன் வழியே எதைப் பற்றியும் கவலைப்படாமல் போனான்.
யோகானந்தர் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாத யுக்தேஸ்வர் சிரிப்பினூடே சொன்னார். "அந்த நாட்டுப்புறத்தானுக்கு காலி•ப்ளவர் அவசரமாகத் தேவைப்பட்டது. அதனால் தான் அவனுக்கு நீ கொண்டு வந்த காலி•ப்ளவர்களில் ஒன்றைத் தர நினைத்தேன்....."
யோகானந்தர் ஓடிச் சென்று தன் அறையை சோதனை செய்தார். அவருடைய தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம், பணம் எல்லாம் கட்டிலின் மேலே பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தபடி இருக்க திருடன் குனிந்து கட்டிலிற்கு அடியில் மறைவாக இருந்த காலி•ப்ளவர்களில் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றிருப்பது தெரிந்தது.
யோகானந்தர் தன் குருவிடம் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது "விஞ்ஞானம் ஒரு நாள் இந்த ரகசிய சக்திகளை அறியும்" என்று மட்டும் யுக்தேஸ்வர் சொன்னார்.
சில வருடங்களில் ரேடியோ என்ற அதிசயக் கருவியை இந்த உலகம் அறிய ஆரம்பித்தது. அப்போது யோகானந்தர் தன் குருவும் ஒரு மனித ரேடியோ என்று நினைத்தார். ரேடியோ எப்படி ஆயிரக்கணக்கான ஒலியலைகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட அலையை எடுத்து ஒலிபரப்ப முடிகிறதோ அதே போல் அவர் குருவாலும் எங்கிருக்கும் எந்தத் தகவலையும் படிக்க முடியும் என்று கூறினார். அதே போல் தன் குருவால் யாருக்கும் தகவலை அனுப்பவும் முடியும் என்றும் நம்பினார்.
இன்னொரு முறை ஆசிரமத்தில் சில கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் அவற்றில் கலந்து கொண்டு இரவில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தில் அனைவரும் தங்கள் பணிகளை முடித்து விட்டு உறங்கச் சென்ற போது நடுநிசியாகி விட்டது. உறங்கச் சென்ற சில நிமிடங்களில் யுக்தேஸ்வர் எழுந்ததைக் கண்ட யோகானந்தர் குருவிடம் காரணம் கேட்டார்.
"நம் நண்பர்களில் ஒரு குழு தங்கள் ரயிலைத் தவற விட்டு விட்டது. அவர்கள் திரும்பி இங்கு வரப் போகிறார்கள். பசியுடன் வரும் அவர்களுக்கு உண்ண ஏதாவது உணவு தயாரிக்க வேண்டும்"
அந்த நள்ளிரவில் அந்தக் குழுவினர் திரும்பி ஆசிரமத்திற்கு வருவார்கள் என்பதை நம்ப யோகானந்தருக்கு சிரமமாக இருந்தாலும் அவர் குருவுடன் சேர்ந்து உணவு சமைக்கக் கிளம்பினார். அவர்கள் உணவு தயாராகிய போது உண்மையிலேயே ரயிலைத் தவற விட்ட குழுவினர் அந்த அகால நேரத்தில் தொந்திரவு செய்வதற்கு வருத்தம் தெரிவித்தபடி வந்து சேர்ந்தனர். பசியுடன் வந்த அவர்களுக்கு சூடாகக் காத்திருந்த உணவையும் கண்டபின் ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.
Comments
Post a Comment