Post 9

POST 9 : 1956ல் கனடாவில் டொரண்டோவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு ரோசன் என்ற மனோதத்துவ மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு நபரை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்து எதையோ எழுத ஆரம்பித்தார். அவர் ஒரு பாரா எழுதி விட்டு ஓய்ந்து பின் சுயநினைவுக்கு வந்தார். அதைப் படிக்க முயன்ற டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அது என்ன மொழி என்றே தெரியவில்லை. அதை எழுதிய நோயாளிக்கும் அது பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே அந்த டாக்டர் அது எதாவது மொழியா இல்லை அர்த்தமில்லாத வரை எழுத்துகளா என்று கண்டு பிடிக்க மொழி ஆராய்ச்சியாளர்களிடம் அந்தத் தாளை அனுப்பினார். அவர்களிடமிருந்து கிடைத்த பதில் அந்த டாக்டரை இன்னும் அதிகமாகக் குழப்பியது. அந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் அது மேற்கு இத்தாலியில் கிமு ஒன்றாம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட ஆஸ்கன் என்ற மொழி என்றும் அதன் எழுத்து வடிவிற்கான ஒரு ஆதாரம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு பிணத்துடன் சேர்ந்து புதைக்கப்பட்ட ஈயத் தகடில் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்கள். அது ஏதோ மந்திரிக்கப்பட்ட சாபம் என்று பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்ததாகவும் அந்த சாபத்தைத் தான் ஆஸ்கன் மொழியிலேயே அந்த நோயாளி எழுதி இருக்கிறார் என்றும் தெரிவித்தனர். . முதலில் டாக்டருக்கும் இந்த செய்தி தெரிந்து பரபரப்படைந்தவர்களுக்கும் தோன்றியது பூர்வஜென்மத்தில் அந்த நோயாளி அந்த ஆஸ்கன் மொழி பேசும் இனத்தவராக இத்தாலியில் கிமு காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தான். இல்லா விட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஒரு மொழியைத் திடீரென்று ஹிப்னாடிச மயக்கத்தில் அந்த நோயாளி எப்படி எழுதியிருக்க முடியும் என்று சிந்தித்தனர். அது வரை அவர்கள் அறிந்திருந்த பூர்வஜென்ம நினைவுகள் எல்லாம் ஒருசில நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவையாகவே இருந்தன. இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய கி.மு காலத்தைய நினைவு என்றால் அது மிகப்பெரிய மைல்கல் என்று ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் நன்றாக விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. ஒரு நாள் அந்த நோயாளி நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விரித்து வைத்திருந்ததைக் கவனித்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் பெரிய எழுத்துகளில் ஆஸ்கன் மொழியில் ஈயத்தகட்டில் பதித்திருந்த சாபத்தின் படத்தை ஒரு கணம் பார்த்திருக்கிறார். ஒன்றும் புரியாத அதை அவர் அப்போதே மறந்தும் போயிருந்தாலும் ஒரு கணம் பார்த்த அந்தப் படத்தை அவர் அறியாமலேயே முழுவதுமாக அவர் மூளை படமாக உள்ளே பதித்துக் கொண்டிருக்கிறது. அது சில காலம் கழித்து அவருடைய ஹிப்னாடிச மயக்கத்தில் வெளி வந்திருக்கிறது. ஒரு கணமே தற்செயலாகப் பார்த்த ஒரு அறியாத மொழியில் எழுதப்பட்டதை சில காலம் கழித்து அப்படியே எழுத முடிவது ஆச்சரியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது போன்ற நிகழ்வுகளைக் கூட ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியாக நினைக்கவில்லை. ஏனென்றால் இதற்கு ஒரு விளக்கத்தை அறிந்திருந்த அறிவியல் ரீதியாக அவர்களால் அறிய முடிந்தது தான். ஆழ்மன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி எல்லாம் தற்போதைய அறிவியலுக்கு அகப்படாத மனோசக்தியின் தன்மையை அறிய முற்படும் ஆவலாக இருந்தது

Comments

Popular posts from this blog

POST 2

Post 12