Post 14
POST 15: ஆழ்மனம் ஒரு அறிமுகம்
ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது
அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம்.
அது வரமாகலாம்.
சாபமுமாகலாம்.
அது எப்படி ?
மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது.
அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது.
நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது.
ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.
ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம்.
நம்மை உண்மையாக இயக்குவது அது தான்.
கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல் மன ஆதிக்கத்தில் இருக்கிறோம்.
மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
உதாரணத்துக்கு
ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது.
அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது.
ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது.
பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம்.
இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.
இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது.
இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும்.
எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.
தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது.
ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு.
ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும்.
மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை என்று எடுத்துக் கொண்டுவிடும்.
ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும்.
எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த உலகில் எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அல்லது எதை நிறைவேற்ற விரும்புகிறீர்களோ அதன் மீது மட்டுமே தங்களின் அதிகப்படியான கவனத்தைச் செலுத்துங்கள்.
தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விதைத்து கொள்ளாதீர்கள்.
நீங்கள் பார்க்கின்ற, கேட்கின்ற, செய்கின்ற எல்லா செயல்களுக்கும் பின்னும் உங்களின் எண்ணம் ஒளிந்திருக்கிறது.
இதை நீங்கள் தினந்தோறும் பரிசோதனை செய்து கூடப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கடிகாரத்தை வாங்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் ஆழ்மனதில் இதை நீங்கள் நினைத்தவுடன் நினைத்த நிமிடத்திலிருந்து அது உங்களைச் சேரும் வரை.,
உங்கள் ஆழ்மனது உங்களையும் கேட்காமலே, எங்கேயெல்லாம் கடிகாரத்தையோ, விளம்பரப் படத்தையோ அல்லது இணையதளத்திலோ உங்கள் ஆழ்மனம் அதை நோக்கிக் கவர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் நீங்கள் கண்ட அக்காட்சியும் எண்ணமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது எந்தப் புள்ளியில் இவை இரண்டும் சந்தித்துக் கொள்கின்றனவோ அங்கே, அத்தருணத்தில் நீங்கள் அதை வாங்கி விடுவீர்கள்.
ஆனால் உண்மையில் நீங்கள் நாள் முழுவதும் கடிகாரத்தை மட்டும் பார்க்கவில்லை, மற்ற பொருட்களையும் சேர்த்தே தான் பார்த்திருப்பீர்கள்.
இதே போல தான் உங்கள் வெற்றியும்..எந்த இலக்கை நோக்கி எதை வேண்டுகிறீர்களோ அதை எந்த அளவிற்கு அதை உங்கள் ஆழ்மனதிற்கு புரிய வைக்கிறீர்களோ அதைப் பொறுத்துத் தான் உங்களது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ஆம்.,நண்பர்களே..,
தெளிவான சிந்தனையோடு, தீர்க்கமான முடிவுகளோடு ஆழ்மனதின் அனுமதியோடு, வெற்றியை நோக்கி நல்ல எண்ணங்களுடன் நீங்கள் பயணித்துக் கொண்டே இருக்கலாம்.
வெற்றி உங்களை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
ஆல்ஃபா அலை
எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கும்போது சாத்தியமாகின்றன.
அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை.
அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.
முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.
1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.
முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள்.
அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார்.
அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.
புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள்.
அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை.
அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில்.
பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.
அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம்.
கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை.
ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம்.
ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax).
பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது.
THIS IS THE LAST POST ON THIS SUBJECT.
Comments
Post a Comment